Saturday, September 8, 2012

தகவல் தராத நகராட்சிக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது


தகவல் தராத நகராட்சிக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது


ஓசூரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் அளிக்க மறுத்த நகராட்சி நிர்வாகம், பாதிக்கப்பட்டவருக்கு, 2,000 ரூபாய் இழப்பீடு வழங்க கிருஷ்ணகிரி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ஓசூர் நகராட்சியில் வாகன நிறுத்தும் இடங்களில் நகராட்சி நிர்ணயித்த கட்டணம் 5 ரூபாயை விட அதிகமாக, 7 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கூடுதலாக 2 ரூபாய் வசூலிக்கப்படுவது ஏன்? மற்றும் நடவடிக்கை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தகவல் கோரி ஓசூர் சமூக நுகர்வோர் நலபாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் அருணாச்சலம், தமிழக அரசின் நகராட்சியில் ஆவண தகவல் அலுவலரிடம் விவரங்களை கேட்டார்.

தகவல் கட்டணமாக, 10 ரூபாய் நீதிமன்ற முத்திரை வாயிலாக செலுத்தினார். தகவல் உரிமை சட்டம்படி சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம், 15 நாளில் மனுதாரருக்கு தகவல் அளித்திருக்க வேண்டும். ஆனால், ஆறு மாதத்திற்கு மேலாக நகராட்சி நிர்வாகம் அருணாச்சலம் கேட்ட தகவலை அளிக்காமல் இழுத்தடித்தது. அதனால், தகவல் அளிக்க மறுத்த நகராட்சி நிர்வாகம் மீது சேவை குறைப்பாடு இழப்பீடாக ஒரு லட்சம் வழங்க கோரியும், மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் வழங்க வலியுறுத்தியும் மொத்தம், 2 லட்சம் இழப்பீடு கேட்டு பாதிக்கப்பட்ட மனுதாரர் அருணாச்சலம் கிருஷ்ணகிரி நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இரு தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் அளிக்க மறுப்பது சேவை குறைபாடுதான் எனக் கூறி, பாதிக்கப்பட்ட மனுதாரர் அருணாச்சலத்திற்கு, ஓசூர் நகராட்சி நிர்வாகம், 2,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த தொகையை வழங்க தாமதமாகும் பட்சத்தில், 9 சதவீதம் வட்டியுடன் செலுத்த வேண்டும், என உத்தரவிட்டார். இதன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய நிவராணம் கிடைக்காத பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற முடியும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நன்றி : செய்தி உதவி தினமலர் 

No comments:

Post a Comment