Saturday, September 8, 2012

மனித உரிமைகளை கொல்லும் மத்திய, மாநில அரசுகள்!


மனித உரிமைகளை கொல்லும் மத்திய, மாநில அரசுகள்!


ஒரு தேசத்திற்கு இறையாண்மை எந்த அளவிற்கு முக்கியமானதோ, அதே அளவிற்கு அந்நாட்டு குடிமக்களுக்கு மனித உரிமைகளும் முக்கியமானது. குடிமக்களின் மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாத ஒரு நாடு எவ்வளவு ஆயுதங்களை வைத்திருந்தாலும் இறையாண்மை பெற்ற நாடாக செயல்பட முடியாது.
மனித உரிமை என்ற விரிந்த பொருளைக் கொண்டது. ஆனால் பொதுமக்கள் மனித உரிமைகளை முழுமையாக புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக மனித உரிமைகள் குறித்த கருத்துகள் மக்களை சென்றடைய விடாமல் தடுப்பதில் அரசு அமைப்புகள் முனைந்து நிற்கின்றன.
தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாக நிற்பதே மனிதஉரிமை ஆர்வலர்களின் செயல்பாடு என்ற கருத்து ஆட்சியில் இருப்போராலும், பெரும்பாலான ஊடகங்களாலும் மக்களிடம் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. இதையடுத்து மனித உரிமைகள் என்ற கருத்து சமூகத்தில் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் மனிதர்கள் தோன்றிய நாள் முதலாகவே மனித உரிமை கருத்தியல் வெவ்வேறு மனித இனங்களிலும், மனிதக் குழுக்களிலும்  பேசப்பட்டு வந்துள்ளது. தமிழ் இலக்கியத்திலும்கூட  பல்வேறு இடங்களில் மனித உரிமைக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன் மிக எளிய உதாரணமாக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…” என்ற திருக்குறளைக் கூறலாம்.
எனினும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே மனித உரிமைக் கோட்பாடுகளின்  அரசியல்ரீதியான முக்கியத்துவத்தை உலகம் அறிந்து கொண்டது.
உலக நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்களில் சாமானிய மக்கள் படும் அவஸ்தைகளை கண்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் அவையை உருவாக்கினர். அங்கு நடந்த நீண்ட விவாதங்களின் விளைவாக 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் நாள் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்டது.
இந்த பிரகடனத்தின்படி, “மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும்” ஆகும். இந்த உரிமைகள் “மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக” கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை.
மனித குல வரலாற்றின் இந்த முக்கியமான அம்சத்தை உள்வாங்கிய இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கார், இந்த பிரகடனத்தில் உள்ள ஏராளமான அம்சங்களை இந்திய அரசியல் சட்டத்திலேயே இணைத்துள்ளார்.
எனினும் இன்றுவரை இந்தியாவையும், இந்தியாவின் மாநிலங்களை ஆட்சி செய்த அரசுகள் அம்பேத்கார் திட்டமிட்ட இந்தியாவை உருவாக்குவதில் பத்து சதவீதம்கூட செயல்படவில்லை என்பதே உண்மை. சமூக, பொருளாதார உரிமைகள் குறித்த விவகாரங்களில் மிகவும் அலட்சியமாக செயல்படும் இந்த அரசுகள், அடிப்படை உரிமைகளைக்கூட திட்டமிட்டு மீறியே வருகின்றன.
உதாரணமாக, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 20(3)ன் படி “குற்றம் சாட்டப்பட்ட எந்த நபரையும், தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பிரிவு 20(1), “சட்டப்படி குற்றம் எனக்கருதப்படும் செயலுக்காக, அந்த சட்டத்தை மீறிச் செய்ததற்காக அன்றி, எந்த நபரும் தண்டிக்கப்படக்கூடாது. அந்த குற்றத்துக்காக சட்டப்படி விதிக்கப்பட்ட தண்டனையைவிட அதிகமான தண்டனையை விதிக்கக்கூடாது!” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு அரசு இயங்கவேண்டிய விதத்தை கூறவேண்டிய அரசியல் அமைப்புச் சட்டம் எதற்காக இதுபோன்ற விவகாரங்களை விளக்க வேண்டும் என்ற சந்தேகம் எழலாம். ஆனால் அரசு அமைப்புகள் இவ்வாறுதான் இயங்கும் என்பது நமது அரசியல் சட்ட சிற்பிகளுக்கு அன்றே தெரிந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபரை, தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று அரசியல் அமைப்புச் சட்டமே எச்சரித்துள்ளது. ஆனால், ஒரு குற்றச்செயலை செய்ததாக சந்தேகப்படும் அல்லது அகப்படும் நபர்களை சித்திரவதை செய்து அந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்துவதே அனைத்துக் காவல்நிலையங்களிலும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அதேபோல குற்றநிகழ்வுகளில் குற்றம் சாட்டப்பட்டோரையும் அரசு அமைப்புகளை விமர்சனம் செய்வோரையும் விசாரணையின்றியே “என்கவுண்டர்” போன்ற முறைகளில் தீர்த்துக்கட்டும் சட்டவிரோதப் போக்கும் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.
குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதை முதன்மை கடமையாக மேற்கொள்ள வேண்டிய அரசே, மனித உரிமைகளை மறுக்கும் – மீறும் முதன்மை அமைப்பாக இருப்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பான்மையான உலக நாடுகளில் வழக்கமாக உள்ளது.  இந்நிலையை மாற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையும், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் மேற்கொண்ட மிகநீண்ட நடவடிக்கைகளின் விளைவாக இந்தியாவில் “மனித உரிமை பாதுகாப்புச் சட்டம்” கடந்த 1993ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் தேசிய மற்றும் மாநில உரிமை ஆணையங்களை அமைப்பது இந்த சட்டத்தின்படி வலியுறுத்தப்பட்டது. அரசு அமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அமைப்புகளை நாடி தீர்வு பெறுவதற்கு வழிவகை செய்யும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் நடைமுறையில் இந்த அமைப்பு எந்தவிதமான அதிகாரங்களும் அற்று, பதவி ஓய்வு பெற்ற சிலருக்கு மறுவாழ்க்கை கொடுக்கும் அமைப்பாக மட்டுமே செயல்படுகிறது.
மனித உரிமை ஆணையங்களுக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை ஆயுதப்படையினரின் அத்துமீறல்கள் குறித்த புகார்களே! ஆனால் அந்தப் புகார்களை விசாரிப்பதற்கு காவல்துறையினரையே பயன்படுத்த வேண்டிய நிலையில்தான் மனித உரிமை ஆணையங்கள் இருக்கின்றன.
தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில மனித உரிமை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் தலைமை  ஏற்று நடத்தும் இந்த ஆணையங்களின் அதிகாரம் மிகவும் சொற்பமானவை. மனித உரிமை மீறலில் ஒரு அதிகாரி ஈடுபட்டார் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டால்கூட அவர்களை தண்டிக்கும் அதிகாரம் இந்த ஆணையங்களுக்கு கிடையாது. அவர்களை தண்டிக்குமாறு அவர்கள் பணியாற்றும் துறைகளுக்கு இந்த மனித உரிமை ஆணையங்கள் பரிந்துரை செய்யலாம். அதை ஏற்பதும், மறுப்பதும் அந்தத்துறையின் விருப்புரிமையே.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்ட பொடா சட்டத்தை அதன் துவக்க நிலையிலேயே தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி “பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் கருத்தை மத்திய அரசு எந்த அளவுக்கு கருத்தில் கொள்கிறது என்பதற்கு இதையே உதாரணமாக கொள்ளலாம்.
அதேபோல சர்ச்சைக்குரிய “என்கவுண்டர்” மரணங்கள் குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையம் திட்டவட்டமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி அனைத்து என்கவுண்டர் சம்பவங்கள் குறித்தும் முறைப்படியான கொலை வழக்கை தொடுத்து விசாரணை நடத்த வேண்டும். ஆனால் விதிவிலக்கான மிகச்சில சம்பவங்களைத் தவிர நாடு முழுவதும் நடைபெறும் என்கவுண்டர் சம்பவங்கள் அனைத்தும் கண்துடைப்பு விசாரணைகளோடு முடிக்கப்படுகின்றன.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும். இவர்களோடு மனித உரிமை கோட்பாடுகளில் அறிவும், ஈடுபாடும் கொண்ட மேலும் இருவர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது. அரசு சாராத மனித உரிமை ஆர்வலர்களை மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக்கவே இந்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனஆல் நடைமுறையில் அரசுக்கு இணக்கமாக பணிபுரிந்த உயர் அதிகாரிகளுக்கு  மறு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களுக்கு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது. இதன் உச்சகட்டமாக தேசிய மனித உரிமை  ஆணையத்தில் கடந்த 2004ம் ஆண்டு பி.சி.சர்மா என்ற ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
மனித உரிமைகளை ஒடுக்குவதாக அதிக அளவில் புகாருக்கு உள்ளாகும் காவல்துறையில் இருந்து ஒரு உயரதிகாரியை தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக நியமனம் செய்வதற்கு நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புகள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு அவருக்கு பல்வேறு முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டதோடு, கடந்த 2009ம் ஆண்டு அவருடைய ஐந்தாண்டு பணிக்காலம் முடிந்தவுடன் மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த 1996ம் ஆண்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. இங்கும் மனித உரிமைச் செயல்பாடுகளில் ஈடுபடும் உண்மையான ஆர்வலர்கள் யாருக்கும் உறுப்பினர் வாய்ப்பளிக்கப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கே உறுப்பினர் வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதிமுக ஆட்சிக்காலத்திலோ மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு உறுப்பினர்களே நியமிக்கப்படாமல் அந்த ஆணையம் முடக்கப்பட்டது.
மேலும், மாநில மனித உரிமை ஆணையத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த புகார்களை விசாரிக்கும் பொறுப்பு காவல்துறையினரிடமே ஒப்படைக்கப்படுகிறது. அந்த  காவல்துறை அதிகாரிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறையினரிடம் சித்திரவதையின் சான்று தெரியாமல் எச்சரிக்கையாக செயல்படுமாறு – அதாவது வெளிக்காயம் படாமல் சித்திரவதை செய்யுமாறு அறிவுரை கூறுவதை வழக்கமாக  கொண்டுள்ளனர் என்று  கூறப்படுகிறது.
தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை கல்வி வாயிலாகவும் மற்ற வழிமுறைகள் வாயிலாகவும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.
தேசிய மனித உரிமை ஆணையமோ, மனித உரிமைகளை மீறும் அரசுத்துறையினருக்கே ஏதேதோ பயிற்சிகளை கொடுப்பதாக இணையதளம் மூலம் கூறுகிறது. மக்களிடம் பணியாற்றுவதற்கான திட்டங்கள் அந்த அமைப்பிடம் இருப்பதாக தெரியவில்லை.
தமிழ்நாடு அரசோ மனித உரிமை என்ற சொல்லையே தடை செய்யும் முயற்சியில் உள்ளது. “மனித உரிமை என்ற சொல்லை பயன்படுத்தி யாரும் அமைப்புகளை ஏற்படுத்தக்கூடாது: இதுவரை அந்தப் பெயரில் செயல்பட்டு வரும் அமைப்புகளும் பெயரை உடனடியாக மாற்றவேண்டும்” என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மனித உரிமை அமைப்புகள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகளிடம் தவறாக நடப்பதாக அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. நியாயமாக நடந்துகொள்ளும் எந்த துறையும், எந்த அதிகாரியும் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசு அமைப்புகளே, அம்மக்களின் மனித உரிமைகளை மீறும்போது சமூக ஆர்வம் கொண்ட குடிமக்கள் திரண்டு மனித உரிமை அமைப்புகளை உருவாக்கி மனித உரிமை கலாசாரத்தை வளர்த்தெடுப்பது இயல்பானது. இத்தகைய முயற்சிகளை அரசு அமைப்புகள் அனைத்து உதவிகளையும் செய்து ஆதரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ மனித உரிமை கோட்பாட்டின் மாண்புகள் மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் மனித உரிமை என்ற பெயரைத் தாங்கிய அமைப்புகள் செயல்படக்கூடாது என்பது போன்ற கருப்புச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
குடிமக்களின் மனித உரிமைகளை வழங்க மறுக்கும் ஒரு அரசு குடியரசாக செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அவ்வாறான அரசுகள் மற்ற நாட்டு அரசுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், மற்ற சக்திகளுக்கும் குற்றேவல் புரியும் கூலிப்படை அமைப்புகளாகவே செயல்படும். எனவே ஒரு நாட்டின் இறையாண்மையை தீர்மானிக்கும் அம்சங்களில் முக்கிய அம்சமாக அந்நாட்டு குடிமக்களுக்கு அனுமதிக்கப்படும் மனித உரிமைகளே முக்கிய அளவுகோலாகும்.
மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு அரசுகள் விதிக்கும் தடைகளை எல்லாம் தாண்டி மனித உரிமைக் கோட்பாடுகளை கற்றுக்கொள்வதும், மனித உரிமைக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதுமே நமது உரிமைகளை பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முதன்மை கடமையாகும்.

No comments:

Post a Comment